புதன், டிசம்பர் 28, 2011

கடலூரில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் துறைமுகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 800 கி.மீ., தூரத்தில்,
 வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து, "தானே' புயல் சின்னமாக மாறியுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. "தானே' புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்குமிடையே, 30ம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "தானே' புயல் உருவாகியுள்ளதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் தூர எச்சரிக்கையைத் தெரிவிக்கும் வகையில், 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் கடல், கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்தைவிட அலை சீற்றம் அதிகரித்துள்ளது.

கடலூரில், தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு திடீரென கடல் நீர், 300 மீட்டர் தூரத்திற்கு ஊருக்குள் புகுந்ததால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். நாளை, கடலூர் மாவட்ட கடலோர பகுதியில், 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, கடலூர் மீன் வளத்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. கடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.


படகுகள் சேதம்: கடலூர் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, கடல் நீர் திடீரென ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான படகுகள், ஒன்றோடு ஒன்று மோதியும், அதிலிருந்த வலைகள், இன்ஜின்கள் சேதமடைந்தன' என, வந்த தகவலின் பேரில், கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், கடலூர் அடுத்த புதுக்குப்பம் கடலோரப் பகுதியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் புதுக்குப்பம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட படகுகளில் வைக்கப்பட்டிருந்த வலைகள், இன்ஜின்கள், படகுகள் சேதமடைந்தது கண்டறியப்பட்டது.

கருத்துகள் இல்லை: