முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவோம் என்ற கேரள அரசின் முடிவை எதிர்த்து மதுரை மாவட்ட வக்கீல்கள் சாலை மறியல், ரெயில் மறியல், பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம், கேரள நிறுவனங்களை மூடக்கோரி போராட்டம் போன்ற பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 27.12.2011 அன்று காலை 11.30 மணிக்கு மதுரை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் பூசைத்துரை, சேகர் ஆகியோர் மாவட்ட கோர்ட்டு கட்டிடத்தின் மாடியில் ஏறி உச்சியில் நின்று கொண்டு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி செயல்படும் கேரள அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள கேரள நிறுவனங்களுக்கு தமிழக போலீசார் பாதுகாப்பு அளிப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர். இதை தொடர்ந்து மதுரை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி, தமிழ்நாடு வக்கீல்கள் சங்க மாநில செயலாளர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் கருணாநிதி, இணை செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தற்கொலைக்கு முயன்ற வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள், கலெக்டர் நேரில் வந்து எங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்தால் மட்டுமே தற்கொலை முயற்சியை கைவிடுவோம் என்றனர். கலெக்டர் வெளியூர் பயணத்தில் இருந்ததால் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேஷ், மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி(பொறுப்பு) தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மதியம் 1.30 மணிக்கு அவர்கள் 2 பேரும் மாடியில் இருந்து இறங்கி வந்தனர். இதற்கிடையே கலெக்டர் சகாயம் மாவட்ட கோர்ட்டுக்கு வந்தார். மாவட்ட நீதிபதிகள் அறையில் வக்கீல்களுடன் பேச்சுவாத்தை நடந்தது. அப்போது கலெக்டர், வக்கீல்களின் கோரிக்கையை உடனடியாக அரசுக்கு தெரிவிப்பதாக கூறினார். இதை தொடர்ந்து வக்கீல்கள் சமாதானமாக சென்றனர்.
நன்றி: நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக