ஞாயிறு, டிசம்பர் 25, 2011

ஒ.பி.சி ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் வரவேற்பு

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வரவிருக்கும் தருணத்தில் கடந்த 22-ஆம் தேதி நடந்த கேபினட் அமைச்சரவை
 கூட்டத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஒ.பி.சி(இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) இடஒதுக்கீட்டில்4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

மத மற்றும் மொழி ரீதியிலான சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த ஒதுக்கீட்டை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுக்குறித்து அவர் கூறுகையில்; ’முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கு இது ஒன்று மட்டுமே தீர்வாக அமைந்து விடாது. தற்போது அமுலில் உள்ள அரசாணைப்படி ஒ.பி.சி பிரிவினருக்கு அதாவது சில மாநிலங்களில் உள்ள ஒரு சில முஸ்லிம் பிரிவு உள்பட பல்வேறு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இதில் சில பிரிவினருக்கு என தனி உள் ஒதுக்கீடு எதுவும் இல்லை. ஒ.பி.சியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. ஒ.பி.சி இட ஒதுக்கீட்டில் வரும் பெரும்பாலான இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள உயர் வகுப்பினருக்கே போய் சேருகின்றது.

இந்த வகையில் தற்பொழுது அமுலில் உள்ள 50 சதவீத ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13.7 சதவீத ஒதுக்கீடும் அதில் நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா அவர்கள் பரிந்துரை செய்தது போன்று முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒ.பி.சி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால்,சச்சார் கமிட்டி தனது அறிக்கையில் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும், தற்பொழுது ஒ.பி.சி இட ஒதுக்கீட்டில் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்துவரும் அனைத்துப் பிரிவு இந்து ஒ.பி.சியினரை விட மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும் வருகிற ஜனவரி-2012 முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வரவிருக்கும் இந்த ஒதுக்கீட்டை முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ இவ்வாறு ஏ.எஸ்.இஸ்மாயீல் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: