ரேசன்கார்டுகளை புதுப்பிக்கும் பணி பிப் 1-ந் தேதி தொடங்குகிறது!
கடலூர் மாவட்டத்தில் ரேசன்கார்டுகளை புதுப்பிக்கும் பணி வருகிற 1-ந்தேதி தொடங்கும் என்று மாவட்ட வழங்கல் அதிகாரி கல்யாணம் தெரிவித்தார்.
தமிழகத்தில் பொதுமக்களிடம் பயன்பாட்டில் உள்ள ரேசன்கார்டுகளில் போலிகார்டுகளும் புழக்கத்தில் உள்ளது. எனவே போலிகார்டுகளை நீக்குவதற்காக `ஸ்மார்ட்கார்டு’ வடிவில் ரேசன்கார்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன்கார்டுகளை இன்னும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரேசன்கார்டுகளை புதுப்பிக்கும் பணி வருகிற 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பணியில் ஈடுபட உள்ள ரேசன்கடை விற்பனையாளர்களுக்கான செயல்முறை விளக்க கூட்டம் கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் குடிமைப்பொருள் தாசில்தார் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை சார்-பதிவாளர்கள் ஜம்புலிங்கம், ஜெயவீரன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அதிகாரி கல்யாணம் பேசியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் ரேசன்கார்டுகளை இன்னும் ஓராண்டுக்கு புதுப்பித்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாதம் ஆரம்பிக்கப்பட வேண்டிய இப்பணி `தானே’ புயல் காரணமாக அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. எனவே அடுத்த மாதம்(பிப்ரவரி) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை இப்பணி நடைபெறும்.ரேசன் கார்டுகளை புதுப்பிப்பதற்காக பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரேசன்கடைகளில் குவிந்தால் கூட்டநெரிசல் ஏற்படும் என்பதால் `அ’ பதிவேட்டில் உள்ள எண் பிரகாரம் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 கார்டுகள் வீதம் புதுப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
புதுப்பித்தால் மட்டுமே பொருள் வாங்க முடியும்
குடும்பத்தலைவரோ அல்லது குடும்பத்தில் மூத்த உறுப்பினரோ தான் ரேசன்கார்டை எடுத்துச்சென்று புதுப்பிக்க வேண்டும். ரேசன்கார்டில் உள்ள முகவரியில் மாற்றம் இருந்தாலோ, பெயரில் மாற்றம் இருந்தாலோ, பெயரை சேர்க்கவோ, நீக்கவோ வேண்டியிருந்தாலோ, யூனிட் அளவில் சேர்த்தலோ, நீக்குதலோ இருந்தாலோ ரேசன்கடை விற்பனையாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல் எரிவாயு உருளை எண்ணிக்கை விவரம், கூட்டுக் குடும்பத்தில் இருந்த பிரிந்த கார்டா? அல்லது பிரிக்கப்படாத கார்டா? என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை ரேசன் கடை விற்பனையாளர் பதிவு செய்து ரேசன்கார்டில் முத்திரையிட்டு புதுப்பித்து தருவார். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட கார்டுகளுக்கு மட்டுமே மண்எண்ணை வழங்கப்படும். எனவே ரேசன்கார்டுதாரர்கள் தவறாமல் ரேசன்கடைகளுக்குச்சென்று ரேசன் கார்டை புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எந்த பொருளும் வேண்டாத `என்’ ரேசன்கார்டுகளை புதுப்பிக்கத்தேவையில்லை.
இவ்வாறு மாவட்ட வழங்கல் அதிகாரி கல்யாணம் கூறினார்.
இதில் ரேசன் கடை விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ரேசன் கார்டுகளை புதுப்பிப்பது குறித்து வீடியோ படம் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக