இறைமறை கூறும் இறுதிநாள்...!
அந்த நேரம் எப்போது வரும்? என்று (முஹம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். இதுபற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும்,பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்றுதான் வரும் என்று கூறுவீராக! இபற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை (அல்குர்ஆன் 7:137)
அந்த நேரம் எப்போது வரும்? என்று (முஹம்மதே) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். இதுபற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும்,பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்றுதான் வரும் என்று கூறுவீராக! இபற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை (அல்குர்ஆன் 7:137)
இறுதி நாள் என்பது எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வின் மாபெரும் ஏற்பாடாகும். அது நிகழ்ந்தே தீரும் ஒரு மகத்தான சம்பவமாகும். மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த வல்லமை மிக்க ஆற்றலாளனாகிய அல்லாஹ் நடத்த இருக்கும் திடமான காரியமாகும்.
ஒவ்வொரு மனிதனும் அதை சந்தித்தே தீர வேண்டும். எவராலும் அதை விட்டு தப்பிக்க இயலாது. அந்த நாள்! பல திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த நாளாகும். மனித கற்பனைகளுக்கும், சிந்தனைகளுக்கும் எட்டாத பல நிகழ்வுகளும் காரியங்களும் 'அந்நாளில்' நடந்தேறும்.
உலகோரின் விசாரணையும், தீர்ப்பும் அந்த மகத்தான படைப்பாளனாகிய அல்லாஹ்வினால் நடத்தப்படும் 'அந்த நாளை' நம்புவதும் அதற்கான நற்காரியங்களை மார்க்கம் கூறும் முறைப்படிச் செய்வதும் ஈமானாகும். இறை நம்பிக்கையின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும்.
இந்த இறுதி நாளைப் பற்றிய சிந்தனையில்லாமல் மனிதர்களில் பெரும்பாலோனோர் உலகை வலம் வருகின்றனர். உலகமும் அதன் செழிப்பும் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணுகின்றனர். அவர்களின் இந்த எண்ணம் இறுதி நாளில் பொய்யாகிப் போய் வீடும்.
இதுபோல் மக்களில் பலர் தங்கள் மனதிற்குள் பலவிதமாக தீர்மானித்துக் கொண்டு வாழ்கின்றனர். அவைகளெல்லாம் அந்த நாளில் பலனளிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அந்த நாளைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் எப்படிச் சொன்னார்களோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்றாற்போல் வாழ்வை அமைத்துக் கொள்வது தான் அந்நாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நிறைவைப் பெற்றுத் தரும். அதல்லாமல், விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்வதெல்லாம் இறுதிநாளைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது. விஞ்ஞானத்திற்கு அதற்குண்டான ஆற்றலும் இல்லை. அறிவுமில்லை.
மேலும், விஞ்ஞானம் என்பது கடந்த நூறு, இருநூறு வருடங்களுக்குட்பட்டது தான். ஆனால் ஏகத்துவமும், இறதி நாள் பற்றிய சிந்தனையும் மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே மகத்தான கருணையாளனாகிய அல்லாஹ்வின் பேரருளால் நபிமார்கள், வேதங்களின் தொடர்வரவால் உள்ளதாகும். எனவே, அந்நாளைப் பற்றி எவ்வளவோ விஷயங்களை இஸ்லாம் கூறியுள்ள போதும் ஒரு சில சமபவங்களை மனித சமுதாயத்தின் பார்வைக்குத் தருகிறோம்.
மனிதன் தனக்கு எதிராக சாட்சி கூறும் நாள், அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும் (அல்குர்ஆன் 24:24)
எல்லாம் வல்ல இறைவனின் முன்பு நடைபெறும் நீதி விசாரணையில் மனிதன் தான் செய்த குற்றங்களை மறுப்பானேயானால் அவனுக்கு எதிராக அவனுடைய உடல உறுப்புகள் அல்லாஹ்வின் முன் அவன் செய்த பாவங்களை குறிப்பிட்டு அவனுக்கெதிராக சாட்சியம் சொல்லும். எனவே சாக்கு போக்கு சொல்லியோ அல்லது அல்லாஹ்வை ஏமாளியாகவோ நிணைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எந்த மனிதருக்கும் இருக்குமேயானால் அவர்கள் மேற்குறிப்பிட்ட இறைவசனத்தைப் புரிந்து கொள்ளட்டும்.
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதை காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களை நீர் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.
(அல்குர்ஆன் 22:1-2)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் ஆதமே! என்பான். அதற்கு அவர்கள், என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்'' என்று கூறுவார்கள். அப்போது 'நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை தனியாக பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான் என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம் (அலை) அவர்கள் எத்தனை நரகவாசிகள்? என்று கேட்பார்கள். அதற்கவர், ஒவ்வொரு ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேரை என்று பதிலளிப்பார்கள். இப்படி இவர் கூறும் வேளையில், கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை பிரசவித்து விடுவாள். பாலகன் கூட நரைத்து விடுவான் (அபூஸயீத் அல் குத்ரி (ரலி) புகாரி 4741)
உண்மை பயனளிக்கும் நாள்
இது உண்மை பேசுவோருக்கு அவர்கள உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும் என்று அல்லாஹ் கூறுவான். (5:119)
மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக நன்மை சுவனத்தின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக ஒருவர் உண்மை கூறுகிறார் என்றால் அவர்; அல்லாஹ்விடத்தில் உண்மையாளர் என எழுதப்படுகிறார். நிச்சயமாக பொய் பாவத்தின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக பாவம் நரகத்தின் பக்கம் வழிகாட்டும். நிச்சயமாக ஒருவர் பொய்யுரைக்கிறார் என்றால், அவர் அல்லாஹ்விடம் பொய்யர் என எழுதப்படுகிறாhர் (அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) புகாரி, முஸ்லீம்)
உண்மை பேசுதல் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒன்றாகும். உண்மை பேசுவதன் மூலம் மனிதனின் கண்ணியத்தை அல்லாஹ் உயர்த்துகிறான். உலகில் மனிதர்களில் பலர் உண்மை பேசும் யதார்த்தவாதிகளை அப்பாவிகளாகவும், ஒன்றுமறியா விபரமற்றமவர்களாகவும் நினைத்துக் கொண்டு ஒரு கேலிப் பொருளாக அவர்களை கையாள்கின்றனர். அவர்கள் எதைச் செய்தபோதும் பரிகாசம் செய்கின்றனர். சத்திய மார்க்கத்தின் தூய வடிவம் தான் உலகில் மாபெரும் உண்மையாகும். மக்களில் ஒரு கூட்டத்தினர் இந்த சமுதாயத்தை மறப்பதுடன் அதை எற்றிருக்கும உண்மையாளர்களை கூறு போடுகின்றனர்.
தனிமனிதரீதியாக சமூகரீதியாக, அரசியல்ரீதியாக ஒதுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும் வருகின்றனர். இந்த துன்பங்களால் உண்மையின் மீது அவநம்பிக்கைக் கொள்ளும் மனிதர்களும், உண்மையின் மீது உறுதியாக நிற்கும் மக்களுக்கு எதிர்பாராத உயர்வான பலாபலன்களை தரும் நாள் தான் அந்த உண்மை பயனளிக்கும் நாள். பொய்மையோ, போக்கிரித் தனமோ ஒரு போதும் அந்நாளில் உதவாது.
அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். 'உங்களையே நாங்கள் பின்பற்றினோம். எனவே, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சிறிதளவேணும் எங்களைக் காப்பாற்றுவீர்களா? என்று கர்வம்; கொண்டிருந்தோரிடம் பலவீனர்கள் கேட்பார்கள். அதற்கவர்கள் 'அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியிருந்தால் உங்களுக்கு வழி காட்டியிருப்போம். நாம் இங்கு துடிப்பதும் சகிப்பதும் நம்மை பொருத்தவரை சமமானது. நமக்கு எந்தப் போக்கிடமும் இல்லை' என்று கூறுவர்கள்; (அல்குர்ஆன்: 14:21)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லீம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் (இறை) நம்பிக்கைக் கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகின்றான் எனும் (14;:27) இறைவசனத்தின் கருத்தாகும்.(பரா உ பின் ஆஸிப்ரலி) பகாரி(4699)
உண்மையான தலைவனாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு மனிதர்களில் அறிவீனர்களை அவர்களின் செல்வாக்கைக் கண்டு மனிதர்கள் பின்பற்றுகின்றனர். இந்த மனித தலைவர்களின் மனமுரண்டான சிந்தனைகளுக்குப் பலியாகி உண்மைத் தொண்டனாக அவர்களுக்கு சேவை செய்கின்றனர். தொண்டனின் உண்மையையும் அப்பாவித் தனத்தையம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் மனித தலைவர்கள் உலகில் வேண்டுமானால் ஏதேனும் உதவி செய்யலாம். ஆனால் மறுமையில் எந்த சக்தியையும் பெற்றிருக்க மாட்டார்கள். மட்டுமல்ல, தங்களை நம்பிய, பின்பற்றிய தொண்டர்களை அவமானப்படுத்தி கைவிட்டு விடுவார்கள்.
முஸ்லீம்களில் உள்ள மக்களில் சிலர் தங்களின் மார்க்கம் சமுதாயம் போன்றவற்றின் நலன்களையும் பலன்களையும் கருத்தில் கொள்ளாமல் அதைவிட மேலாக தங்களின் அரசியல் நட்சத்திர தலைவர்களின் மீது பேரன்பு கொண்டு அல்லாஹ்வை மறுக்கும் அவர்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் முஸ்லீம்களும் மேற்கூறிய இறைவசனத்தை சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
மகத்தான இரட்சகனாகிய அல்லாஹ்வோ தனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அடியார்களை உயர்வான வாக்கைக் கொண்டு இம்மையிலும், மறுமையிலும் உறுதிபடுத்துகிறான். எல்லாவிதமான அவமானங்களிலிருந்தும், இழிவுகளிலிருந்தும் காப்பாற்றுகிறான்.
(ஏக இறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களை சிறிதும் காப்பாற்றாது.அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(3:116)
பிள்ளைச் செல்வத்தின் மீதும் பொருட் செல்வத்தின் மீதும் மனிதனுக்கு எப்போதுமே தீராத ஒர் ஆசையுண்டு. தன் கடைசி நேரத்திலும் மற்ற தருணங்களிலும் தனக்குப் பக்கபலமாக இருக்கும் என நினைப்பால் பிள்ளைச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் பெருக்குவதிலும், அதைக் கட்டிக் காப்பதிலும் மிகுந்த அக்கறை கொள்கிறான் மனிதன். இந்த அக்கறையும், சிந்தனையும் ஏக இறைவனையே மறக்கம் அல்லது மறுக்கும் அளவுக்கு போகுமேயானால் அவர்கள் மேற்கூறிய இறை எச்சரிக்கையை மனதில் இருத்திக் கொள்ளட்டும். மேலும் அந்த மக்கட்செல்வமும் பொருட்செல்வமும் மகத்தான படைப்பாளனாகிய அல்லாஹ் மட்டுமே தரும் அருட்கொடையாகும் என்பதை உணர்ந்து கொள்வோமாக!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரணித்தவரை மூன்று பொருள்கள் பின் தொடரும். 1.அவரின் குடும்பத்தினர் 2.அவரின் செல்வம் 3.அவருடைய அமல்கள். இரண்டு திரும்பி விடும். ஒன்று தங்கிவிடும் அதாவது அவரின் குடும்பம், அவரின் செல்வம் திரும்பி விடும். அவருடைய அமல்கள் மட்டும் தங்கிவிடும்.
ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள். (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2: 123)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் அவன் தன் நண்பனின் மார்க்கத்தின் மீது இருக்கிறான். ஆகவே உங்களில் ஒருவர் தாம் யாரிடம் நட்புக் கொள்கிறோம் என்பதைக் கவனித்து வருகிறோம். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லீம்) மேலும், ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் கியாமத் நாள் எப்பொழுது வரும் எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ அதற்காக என்ன தயார் செய்து வைத்துள்ளீர்? என கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் அன்பையும், அவனின் திருத்தூதர் அவர்களின் அன்பையும் தான் எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் யாரை நேசிக்கிறீரோ அவருடன் இருப்பீர் என பதில் அளித்தார்கள்.
நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (59: 18)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இவ்வுலக வாழ்க்கையோ சொற்ப காலம் தான். மறுமை வாழ்வோ நீண்ட நெடியதாகும். மனோ இச்சையும் ஷைத்தானும் தீயவற்றை தூண்டி விட்டு நரகின் பக்கம் கொண்டு செல்கின்றனர். கருணையாளனாகிய அல்லாஹ்வோ மன்னிப்பின் பக்கமும், சுவனத்தின் பாலும் அழைக்கின்றான். அல்லாஹ்வின் பக்கம் உள்ள சிறந்தவற்றை அடைவதில் திறம்பட முயற்சிப்போமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக