வெள்ளி, மார்ச் 25, 2011

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (9, 10, 11)

ஒன்பதாவது சொற்பொழிவு

ஹிஜ்ரி எட்டு, ஜமாதுல் அவ்வலில், ஸிரியாவிலுள்ள மூத்தா என்ற இடத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே சமயம் மதீனாவில் மஸ்ஜிதின் மிம்பரில் நின்றபடி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை:

‘ஜைது (ரளியல்லாஹு அன்ஹு) கொடி பிடித்தார், அவர் கொல்லப்பட்டார்.

பிறகு ஜாஃபர் (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தாங்கி நின்றார்; அவரும் கொல்லப்பட்டார்.


பின்னர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தூக்கிப் பிடித்தார்; அவரும் வீழ்ந்துவிட்டார்.


பின்னர், தான் தளபதியாக நியமனம் பெறாமலே காலீத் இப்னு வலீத் (ரளியல்லாஹு அன்ஹு) கொடியைத்தூக்கி உயர்த்தினார். அவர் வெற்றியடைந்து விட்டார்...


(போரில் மாண்ட) அவர்கள் நம்முடன் இப்பொழுது இருந்திருப்பின் அது நமக்குத் திருப்தி தந்திராது. அவர்கள் நம்முடன் இப்போது இருந்திருப்பின் அது அவர்களுக்குத் திருப்தி உண்டாக்கியிருக்காது.’


(நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கூறுகையில் அவர்களின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பொல பொலவென்று உதிர்ந்தது. (நூல்: புகாரி)



பத்தாவது சொற்பொழிவு


ஹிஜ்ரி எட்டு அல்லது ஒன்பதில் ஒரு வெள்ளிக்கிழமையன்று மதீனாவில் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை:
 
‘மக்களே! நீங்கள் ஒருவர்மீதொருவர் பொறாமைப்படாதீர்கள்! உட்பகை கொள்ளாதீர்கள்! ஒருவர் மற்றவரை இழிவு படுத்தவோ, ஏமாற்றவோ எண்ணாதீர்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! (நீங்கள்) ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரனாகவே இருக்கின்றான். (எனவே) சக முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். அவர்களைப்பற்றி அவதூறாகப் பேசாதீர்கள், அவர்களை அவமரியாதை செய்யாதீர்கள், அவர்களை மிரட்டாதீர்கள்.

(நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் நெஞ்சின்மீது தங்கள் கைவிரலால் மூன்று முறை தட்டிக் காட்டி) இங்கேதான் பயபக்தி இருக்கிறது. ஒரு சகோதர முஸ்லிமின் கண்ணியத்தைப் போக்கி இழிவுபடுத்துவதே இன்னொரு முஸ்லிம் செய்யும் பெரிய அநீதியாகும்; ஒரு முஸ்லிமின் உயிரும், மரணமும், சொத்தும் (உடைமையும்) மற்ற முஸ்லிம்கள் அபகரிக்கக் கூடாதவையாகும். (சங்கையோடு அவைகளைக் காப்பாற்றுவது முஸ்லிம்களின் கடமையாகும்.)

ஒரு முஸ்லிமின் கஷ்டத்தில் உதவும் முஸ்லிமுக்கு அல்லாஹ் கியாம நாளில் அவன் துயரங்களைத் தீர்த்து வைப்பான். மற்றவர்களின் கஷ்டங்களைத் தீர்க்க விரைபவனுக்கு இம்மை மறுமை இரண்டிலும் இறைவன் சகாயம் அளிப்பான். (சகோதர) முஸ்லிமின் தவறுகளை மன்னித்து மறைப்பவனின் குற்றங்குறைகளையும் இம்மை மறுமை இரண்டிலும் இறைவன் (மன்னித்து) மறைப்பான். ஓர் அடியான் மற்றவருக்கு உதவிபுரியும் காலமெல்லாம் அவனுக்கு அல்லாஹ்வும் தனது புனித உதவிகளையும்,
 சகாயத்தையும் அருளுகிறான். கல்வியைத் தேடி நடப்பவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் வழியை இலகுவானதாக்கித் தருகிறான்.

அல்லாஹுத்தஆலாவின் திருமறை (திருக்குர்ஆன்) ஓதப்படும் வீட்டை, அல்லது அல்லாஹ்வின் திருவேதத்தை ஓதி ஞானமடைய அடியார்கள் ஒன்று கூடும் வீட்டை அல்லாஹுத்தஆலாவின் பேரருள் (ரஹ்மத்) சூழ்ந்து கொள்கிறது. மலக்குகளும் அங்கு வந்து கூடுகிறார்கள். (இவ்விதம் ஓதும்) அவர்களைப்பற்றி அல்லாஹ் (பெருமையாகக்) கூறுகிறான். எச்சரிக்கையாய் இருங்கள்! தனது செயல்களால் சிறந்து விளங்காதவர்கள் வேறு எந்த வகையிலும் சிறந்து விளங்க முடியாது.’ (நூல்: முஸ்லிம்)

பதினோராவது சொற்பொழிவு

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எமன் தேச அமீராக நியமித்தார்கள். அவர்கள் பதவியை ஏற்கப் புறப்பட்டபோது நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆற்றிய உரை இது. இதில் ஹளரத் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விளித்தே பேசுகிறார்களென்றாலும், இது அனைவருக்கும் பொதுவான உபதேசமாகவே இருக்கிறது.

ஹளரத் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வழியனுப்ப நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் சென்றிருந்தனர். வழியில்; ஹளரத் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கு நரக விடுதலை கிட்டி சுவர்க்கம் நுழைய உதவக் கூடிய விஷயங்களைக் கற்றுத்தரும்படி கேட்டார்கள்.

 அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாவது:


‘முஆத் அவர்களே! நீங்கள் ஒரு பெரிய விஷயத்தைக் குறித்து பிரஸ்தாபித்துக் கேட்டுவிட்டீர்கள். அல்லாஹுத்தஆலா அதை இலகுவாக்கியவர்களுக்கு நிச்சயமாக அது இலகுவானதாகவே இருக்கும். ஒருக்காலும் இறைவனுக்கு இணை வைக்காதீர்கள், யாரையும் அவனுக்கு ஒப்பானவன் என்று எண்ணாதீர்கள். ஐந்து நேரத் தொழுகையையும் விடாமல் தொழுதுவாருங்கள். ரமளானில் நோன்பை நோற்று வாருங்கள். ஏழை வரியான ஜகாத்தைக் கொடுத்து விடுங்கள். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுங்கள்’.

பிறகு நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘நன்மைகளின் வாயில்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டுக்கொண்டே (மேலும் தொடர்ந்து) நோன்பு (எல்லா ஆபத்துக்களையும், இன்னல்களையும் தடுக்கும்) கவசமாகும். நெருப்பைத் தண்ணீர் அணைப்பதைப்போல் ஸதகா (தர்மம்) பாவங்களைப் போக்கும். (நடுஇரவுத் தொழுகையான) தஹஜ்ஜுத்தைத் தொழ ஏவி, இந்த ஆயத்துக்களை ஓதிக் காட்டினார்கள்;

''அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.'' (அல்குர்ஆன் 32:16)

''அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.'' (அல்குர்ஆன் 32:17)

‘முஆதே! நல் அமல்களின் சிகரத்தை நான் உங்களக்கு விளக்கட்டுமா?’ என்று கூறி மேலும் தொடர்ந்து ‘நல் அமல்களின் சிகரம் இஸ்லாமாகும். தொழுகை அதன் தூணாகும். ஜிஹாத் (புனித யத்தம்) அதன் முகடாகும்.’ மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, ‘இவைகளின் சாரங்களை விளக்கட்டுமா?’ என்று வினவியவாறு தொடர்ந்து தங்களின் நாவைப் பிடித்துக் காண்பித்து) மனிதன் இதைத் தன் கைவசத்தில் வைத்திருக்க வேண்டும். இதன் காரணத்தால் (இதை அடக்காததால்) மக்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படுவார்கள்.

(ஆட்சி முறையையும், கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விளக்கிவிட்டுத் தொடர்ந்து) செல்வந்தர்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து அங்குள்ள ஏழைகளுக்கே விநியோகிக்க வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள்! ஜகாத்துக்காக நல்ல நல்ல பொருள்களாக பொருக்கி எடுத்துக் கொள்ளக்கூடாது. அநீதிக்கும், கொடுமைக்கும் உள்ளானவர்களின் முறையீட்டுக்கு (குறைபாட்டுக்கு) எப்போதும் பயப்படுங்கள். ஏனெனில், அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எவ்வித திரையுமில்லை.’ (நூல்: திர்மிதீ)

- அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி

( இன்ஷா அல்லாஹ், சொற்பொழிவுகள் தொடரும்

கருத்துகள் இல்லை: