[ திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு புரிந்து நடக்க வேண்டும்.]
"கணவன் – மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்சகட்டம்தான் விவாகரத்து. மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது. விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு. நம் ஊரில் கணவனுக்கும் மனைவிக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம். ஒருவர் 17 வயது முதல் காதலித்து 37-வது வயதில் திருமணம் செய்கிறார் என்றாலும், அவர்களுக்குள் இரண்டே மாதங்களில் தகராறு வந்துவிடும்.
திருமண உறவு முறிவது ஏன்? மணமுறிவு கேட்டு நீதிமன்றம் போவதன் பின்னுள்ள காரணங்கள் என்னென்ன?
ஏனெனில், திருமணத்துக்குப் பிறகு, நிறைய மாற்றங்கள் வருகின்றன. அதைச் செய்தாக வேண்டிய கட்டாயம் வருகிறது. ஆனால், அதை இரண்டு பேராலும் செய்ய முடிவது இல்லை. அதுமட்டுமல்லாமல்; திருமணத்துக்குப் பிறகு பொருள் கிடைத்துவிடுவதால், அதன் சுவை குறைந்துவிடுகிறது.
யதார்த்தம் இல்லாத, நடைமுறைச் சாத்தியம் இல்லாத எதிர்பார்ப்புகள் இருவரிடமும் இருக்கும். சுற்றியுள்ள சிறந்த விஷயங்கள் எல்லாம் நம் கணவன்/ மனைவியிடம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும்.
அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகள் முடிந்தால், பெரிய அளவில் பிரச்னைகள் வராது. குழந்தை வரும்போது ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது. குழந்தைக்காக மனைவி அதிக நேரம் செலவிடும்போது, கணவன் தப்பிக்கிறார். அதனால், மனைவிக்கு ஆத்திரம் வரும். யாராவது ஒருவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளின் விவாகரத்துக்கு பிரதான காரணமே இந்தக் குழந்தை வளர்ப்புதான்.
நுகர்வு வெறிகொண்ட இன்றைய நவீன கலாசாரத்தில் பொருட்களை வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கிறோம். அதுவும் எதுவாக இருந்தாலும், உடனே வாங்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், தன் துணை மீது வெறுப்பும் கோபமும் வருகிறது. அது பிரச்னையாக மாறுகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 4,000-க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. ஆண்டுக்கு 20 சதவிகித வழக்குகள் அதிகரிக்கின்றன. முதலில் திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு புரிந்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை!"
நன்றி: டாக்டர் செந்தில்வேலன் மனநல ஆலோசகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக