வியாழன், மார்ச் 31, 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:முக்கிய சூத்திரதாரி கைது – என்.ஐ.ஏ


43 பாகிஸ்தானியர்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு நடந்த கைது சம்பவம் விசாரணையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட நபர் குண்டுவெடிப்பின் பின்னணியில் நடந்த சதித்திட்டத்தில் தனக்கு பங்கிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சதித்திட்டம் தீட்டியதில் பங்கேற்ற இதர நபர்களின் பெயர்களும் அவரிடமிருந்து கிடைத்துள்ளது. இவ்வழியிலான புலனாய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கின் முன்னேற்றத்தைக் குறித்து ஆராய்ந்தது. அதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தைக்காண பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில் என்.ஐ.ஏ முக்கியத்துவம் வாய்ந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், புலனாய்வின் ஒரு பகுதியாக தடவியல் நிபுணர்கள், ரெயில்வே     அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பல்வேறு மாநிலங்களின் மையங்களிலிருந்து ஆதாரங்கள் சேகரித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் பல்வேறு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும், ரெயிலிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் தனக்கும், இதர ஹிந்துத்துவா தலைவர்களுக்கு பங்கிருப்பதாக கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தின் முன்பு அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் பானிபட்டிற்கு அருகே வைத்து சம்ஜோதா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

கருத்துகள் இல்லை: