ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

அமெரிக்காவின் ஹைப்பர்ஸோனிக் விமான சோதனை மீண்டும் தோல்வி

ஆயுத பலத்தை அதிகரிக்க அமெரிக்க தயாரித்த ஃபால்கன் ஹெச்.டி.வி-2 என்ற நவீன ஹைப்பர்ஸோனிக் ஆளில்லா விமானத்தின் சோதனை தோல்வியில் முடிவடைந்தது. விமானத்தின் அமெரிக்க ராணுவ தலைமை மையமான பெண்டகனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைப்பர் ஸோனிக் விமானத்தின் வேகம் மணிக்கு 21 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட சோதனையும் தோல்வியில் முடிவடைந்தது. பூமியிலிருந்து ராக்கெட்டில் இணைத்து ஹைப்பர்ஸோனிக் விமானம் ஏவப்படும். ஆகாயத்தில் சென்ற பிறகு ராக்கெட்டில் இருந்து பிரியும் விமானம் பூமியில் இலக்கை நோக்கி பாயும். ஆனால் வியாழக்கிழமை விமானத்தை ஏவிய குறைந்த நேரத்திற்குள்ளாகவே பெண்டகனுடனான விமானத்தின் கட்டுப்பாடு இழந்துவிட்டது.
கலிஃபோர்னியாவின் வெந்தர்பர்க் விமானநிலையத்திலிருந்து இவ்விமானம் ஏவப்பட்டது. முதல் பரிசோதனையில் ஒன்பது நிமிடங்கள் பறந்த விமானம் பசிபிக் சமுத்திரத்தில் தகர்ந்து வீழ்ந்தது. பெண்டகனும், டிஃபன்ஸ் அட்வான்ஸ் ரிசர்ச் ப்ராஜக்ட்சும் ஏஜன்சியும் இணைந்து ஃபால்கனை தயாரித்துள்ளன.
30.8 கோடி டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்விமானத்தில் ஏறத்தாழ 4000 கி.மீ பயணம் செய்ய 12 நிமிடங்கள் போதும். சாதாரண ஜெட் விமானங்கள் இந்த தூரத்தை கடக்க 5 மணிநேரம் தேவைப்படும். ஏவிய ஒரு மணிநேரத்தில் உலகத்தின் எந்த பகுதியையும் எட்ட ஃபால்கனால் இயலும். வேகம் மட்டுமல்ல அணுகுண்டுகள் உள்பட நாலரை குவிண்டால் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லவும் ஃபால்கன் விமானத்தால் இயலும் என அமெரிக்கா கூறியிருந்தது.

கருத்துகள் இல்லை: