ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு பரங்கிபேட்டை பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது. இதேபோன்று குறள்களுக்கு பரங்கிபேட்டை பாஷையிலேயே பதவுரை
எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது?
திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.
(பிகு. பரிமேலழகர், மு.வ., சாலமன் பாப்பையா, மு.க. இவர்கள்தான் விளக்கவுரை எழுத வேண்டுமா? நாம எழுதக்கூடாதா?

“பரங்கிபேட்டை பாஷையில் திருக்குறளுக்கு பதவுரை” என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம். நான் ரெடிப்பா.)
*** உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
கைலி அவுந்து உலும்போது கை எப்படி கப்புன்னு புடிச்சுக்குதோ அதுமாதிரி கூட்டாளி முசீபத்துலே இருக்கும்போது உளுந்தடிச்சு போயி கூடமாட ஒத்தாசை செய்யிணும்.

*அகர முதல எழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே உலகு
அரபு பாஷைக்கு அலீஃப் எழுத்து எப்படியோ அதுமாதிரி அல்லாஹுத்தாலாதான் இந்த துனியாவுக்கு எல்லாமே.

*கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல
அஹ எஹல பாக்கும்போது, எஹ அஹல பாக்கும்போது பேச்சு மூச்சு இரிக்காது *குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்

பச்சப்புள்ளெ மதலை பேச்சை கேக்காதஹத்தான் பீப்பீ சத்தம்தான் அலஹா
இருக்கு, புல்புல்தாரா சத்தம் அலஹா இருக்குன்னு சொல்லுவாஹா.

*மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்
தந்தைஎன்னோற்றான் கொல்எனும் சொல்

புள்ளெ வாப்பாவுக்கு செய்யிற உதவி என்னான்னு சொன்னா 'இவனைப் பெத்ததுக்கு அஹ ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்’னு சொல்றமாதிரி அவன் நடந்துக்கணும்.


(தொடரும்)
Thanks: Khalifa

கருத்துகள் இல்லை: