வியாழன், மார்ச் 24, 2011

சிரியா:மஸ்​ஜிதுக்குள் அதிரடியாக நுழைந்து கொடூரமாக சுட்டுத் தள்ளிய ராணுவம் – 6 பேர் பலி


சிரியா நகரமான தராவில் பாதுகாப்பு படையினர் மஸ்ஜிதுக்குள் புகுந்து கொடூரமாக நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
தராவிலுள்ள உமர் மஸ்ஜிதில் கடுமையான துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதியைச் சார்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
தராவில் கடந்த சில தினங்களாக அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால், போராட்டத்தின் பின்னணியில் ஆயுதம் ஏந்திய கும்பல் செயல்படுவதாக கூறுகிறது சிரியா அரசு.
அரசியல் சுதந்திரம்,ஊழலை ஒழித்தல் ஆகிய தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை மஸ்ஜிதிலிருந்து வெளியேறமாட்டோம் என எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் சிரியா பாதுகாப்புப் படையினர் மஸ்ஜிதுக்குள் புகுந்து அநியாயமாக சுட்டுத்தள்ளியது. கொல்லப்பட்டவர்களில் ஒரு டாக்டரும் உட்படுவார்.
இதனை அமெரிக்காவில் வசிக்கும் சிரியா மனித உரிமை ஆர்வலர் முஹம்மது அல் அப்துல்லாஹ் தெரிவிக்கிறார்.
பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பெண்களும், குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.தாக்குதல் நடத்தும் முன்பு மின்சாரம் தடைச் செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மஸ்ஜிதில் நடந்த துப்பாக்கிச்சூடு சிரியா முழுவதும் மக்கள் எழுச்சியை கிளர்ந்தெழச்செய்ய வாய்ப்புள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.
எதிர்ப்பாளர்களுடன் பஸ்ஸாருல் ஆஸாதின் சர்வாதிகார அரசு பேச்சுவார்த்தை நடத்தாது என்பதற்கான அறிகுறிதான் இத்தாக்குதல் என கருதப்படுகிறது.
1963-ஆம் ஆண்டு முதல் அவசரச் சட்டம் அமுலிருக்கும் நாடுதான் சிரியா.

கருத்துகள் இல்லை: