சனி, மார்ச் 19, 2011

உலகை கலங்கடிக்கும் 'அணு நெருக்கடி'


அமெரிக்காவை கலங்க வைத்துள்ள ஜப்பானின் 'அணு நெருக்கடி'
o கலக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் - ஜெர்மனி!

o இந்திய அணு உலைகளின் நிலை!

o ஜப்பானில் பெரும் அணு விபத்து உண்டாக்கும் ஆபத்தான நிலை டோக்கியோ வரை கதிர்வீச்சு.


அமெரிக்காவை கலங்க வைத்துள்ள ஜப்பானின் 'அணு நெருக்கடி'
நியூயார்க்: அமெரிக்க அணுசக்தித் துறை விரிவாக்கத்தில் இப்போது பெரிய தடையாக உருவெடுத்து நிற்கிறது ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள 'அணு நெருக்கடி'


மின்சக்தி உற்பத்திக்கு அமெரிக்கா இன்று பெருமளவு நம்பியிருப்பது தனது அணு உலைகளைத்தான். மாற்று ஆதாரங்களான நிலக்கரி, நீர், காற்று, எரிவாயு உள்ளிட்டவற்றின் மூலம் ஓரளவு மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அணு உலைகளை நம்பியிருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

ஆனால் இப்போது ஜப்பானின் மிக பாதுகாப்பான, வசதிகள் நிறைந்த, எந்த இயற்கை பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்ட அணுசக்தி நிலையம் என்று வர்ணிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சிக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்து ஆடிப்போயுள்ளது அமெரிக்கா.


உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடு அமெரிக்காதான். காரணம், ஜப்பானில் உள்ளதைப் போல பல மடங்கு அதிக அணு உலைகளை தனது கடற்கரை நகரங்களில் உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா.
மியாமியில் தொடங்கி அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள அமெரிக்கக் கடற்கரை முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணுசக்தி நிலையங்களும் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, மேற்குப் பகுதியில் பசிபிக் கடற்கரை நகரங்களிலும் 10 அணுசக்தி நிலையங்கள் உள்ளன. அமெரிக்காவின் உள்புற மாகாணங்களில் மட்டும் 64 அணுசக்தி நிலையங்கள் உள்ளன.


இன்று ஜப்பானுக்கு நேர்ந்துள்ள இயற்கைப் பேரிடர், அமெரிக்க கடற்கரையோரங்களில் நிகழ்ந்தால்...? இந்தக் கேள்வியே அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது.

இந்த அச்சம் அமெரிக்க அரசுக்கு இப்போதுதான் வந்துள்ளது. ஆனால் அதன் மக்களுக்கு ரொம்ப காலம் முன்பே வந்துவிட்டது. அதானால்தான் புதிய அணுசக்தி மையங்கள் அமைவதை கடுமையாக அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, இன்னும் 14 புதிய அணுசக்தி மையங்களையும், ஏற்கென உள்ள மையங்களில் 28 அணு உலைகளையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது.


ஜப்பானுக்கு நேர்ந்துள்ள துயரத்தைப் பார்த்த பிறகு, அமெரிக்காவில் எங்கெல்லாம் பூகம்பம் வர வாய்ப்புள்ளது? இந்தப் பகுதிகளில் எத்தனை அணு உலைகள் உள்ளன? இவற்றை அடுத்து என்ன செய்யலாம்? என்ற மறு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு.

இன்னொரு பக்கம், அணுசக்தி நிலையக் கழிகளை என்ன செய்வது என்ற பிரச்சினைக்கு இதுவரை தீர்வே இல்லாமல் உள்ளது. பாலைவனப் பகுதிகளில் கொட்டப்பட்டு வரும் இந்தக் கழிவுகள் மிகப்பெரிய ஆபத்தை தோற்றுவிக்கக் கூடியவையாக உருவெடுத்து நிற்கின்றன. வளரும் நாடுகளின் தலையிலும் இனி இவற்றைக் கட்ட முடியாத நிலை அமெரிக்காவுக்கு.


இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மாற்று சக்தி ஆதாரங்களை வைத்து மின் சக்தியை உற்பத்தி செய்யுமாறு எதிர்க்கட்சிகள் அமெரிக்காவை வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் இயற்கை எரிவாயு ஆதாரங்கள் மிக அதிகமாக உள்ளன. இந்த எரிவாயுவை அடிப்படையாகக் கொண்டு மின்சக்தி உற்பத்தியில் ஈடுபடலாம் என்றும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லாத மின் உற்பத்தி முறை இதுவே என்றும் வல்லுநர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க ஆளும் கட்சியோ, "இது ரொம்ப ஓவர். ஜப்பானின் நில அமைப்பு வேறு. அமெரிக்காவின் நிலவியல் தன்மை வேறு. எனவே ஜப்பானுக்கு நேர்ந்த நிலை அமெரிக்காவுக்கு வராது. அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுதான் முக்கியம்", என்று வாதிடுகின்றனர்.


வெளியில் இப்படிச் சொல்லிக் கொண்டாலும், இயற்கையின் அபார, அளப்பரிய சக்திக்கு முன் அமெரிக்கா மட்டும் என்ன செய்துவிட முடியும் என்ற பதில் சொல்ல முடியாத கேள்வி எழுந்துள்ளதால், அணுசக்தி நிலையங்களுக்கு மாற்றாக, புதிய மின்சக்தி மையங்களை நிறுவுவதில் அமெரிக்கா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

ஜெர்மனியில் பழைய அணுமின் நிலையங்கள் கால அளவு நீட்டிப்பு நிறுத்தி வைப்பு

கலக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமா எங்களுக்கும்தான் என்கிறது ஜெர்மனி! ஜப்பானில் சுனாமியைத் தொடர்ந்து அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத விபத்தின் எதிரொலியாக
ஜெர்மனியில் உள்ள பழைய அணுமின் நிலையங்கள் இயங்கும் கால அளவை நீட்டிப்பதை மூன்று மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஏங்கெலா மெர்கெல் கூறியுள்ளார்.


"ஜப்பானின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நமக்கு சிலவற்றைக் கற்றுத் தந்துள்ளது. நடக்கவே நடக்காது என நாம் இதுவரை நம்பி வந்த பல விளைவுகள், இனி நடக்காது என கூற முடியாது. ஜப்பான் போன்ற மிக முன்னேற்றம் அடைந்த நாட்டில் இதுபோன்ற பயங்கர சம்பவம் நடக்கும்போது, ஜெர்மனி உள்பட, உலகின் மற்ற நாடுகளும் இதிலிருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஜப்பானின் அணுமின் நிலைய நெருக்கடி ஒரு புது விதமான பிரச்னையை நம் முன் கொண்டு வந்துள்ளது. எந்தவித தயக்கமும் இன்றி இந்த சம்பவத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.


ஜெர்மன் அமைச்சரவை அந்நாட்டிலுள்ள அணுமின் நிலையங்கள் இயங்கும் ஆயுள் காலத்தை சராசரி 12 வருடங்களுக்கு நீட்டிக்கும் முடிவை ஆறு மாதங்களுக்கு முன்பு எடுத்தது. இது பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் சட்டமாக்கப்பட்டது.

பொதுமக்களில் 70 சதவீதம் பேர் அணு நிலையங்கள் 2030 வரை இயக்குவதை விரும்பவில்லை என சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பிலிருந்து தெரியவருகிறது. மக்களின் எதிர்ப்பு இருந்த போதிலும், மின் உற்பத்தி திட்டத்துக்கு மிக முக்கியமாக உள்ள அணு நிலையங்களின் விஷயத்தில், மெர்கெல் அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாது எனத் தெரிகிறது.

அதே சமயத்தில், அரசு ஒரு நிபுணர் குழு அமைத்து, மூன்று மாத காலத்தில் அணு நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அனைத்துவித ஆய்வுகளையும் நடத்தும். மின் உற்பத்திக்கு மாற்றுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஆய்வு மேற்கொள்ளும் எனவும் மெர்கெல் கூறினார். ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்திலும், அணு நிலையங்களின் பாதுகாப்பு குறித்து பொதுக் கருத்து உருவாக்க ஜெர்மனி முயற்சியெடுப்பதாக அவர் கூறினார்.
இந்திய அணு உலைகளின் நிலை!


மும்பை: ஜப்பானில் நடந்த பெரும் நிலநடுக்கத்துக்குப் பின் ஏற்பட்ட சுனாமியில் அந்நாட்டில் உள்ள அணு மிண் நிலையங்களில்விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கதிர்வீச்சு பரவியுள்ளது. இது மேலும் பரவக் கூடும் எனும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும், அணு உலைகளுக்கும் ஆபத்தில்லை என அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் திங்களன்று தெரிவித்தார்.


இந்திய அணுசக்தி நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை. சுனாமிக்குப் பின் ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுநிலையம் அடிப்படையில் பாதுகாப்பானதே. சுனாமியால் அதன் குளிர்விப்பான்களில் ஏற்பட்ட முடக்கத்தினால் வெப்பம் மிகுந்ததே இப்போதைய பிரச்னைக்கு காரணம். ஆனால் அது குறித்து இப்போது நமக்கு இன்னும் முழு விவரம் கிடைக்கவில்லை என்றார் அவர்.


மேலும், நிலநடுக்கங்களைப் பொறுத்தவரை, ஜப்பானில் நிகழும் நில அதிர்வுகளுக்கும் இந்தியாவில் நடக்கும் அதிர்வுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 2001-ம் ஆண்டு குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் நடந்த பூகம்பத்துக்குப் பின்னும், காக்ராபூர் அணுமின் நிலையம் தொடர்ந்து இயங்கியது. தென்னிந்தியாவில் சுனாமி தாக்கியபோது சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டு, சில நாள்களுக்குப் பின் மீண்டும் தொடர்ந்தது.


ஜப்பானின் சமீபத்திய அனுபவத்திலிருந்து அணுமின் நிலையங்களின் வடிவமைப்பில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற பாடத்தை நாம் படிக்க வேண்டும். உலக அணுசக்தி உற்பத்தியாளர் சங்கம் எனும் அமைப்பு தொடர்ந்து உலகிலுள்ள அணுமின் நிலையங்களின் செயல்பாட்டை கவனித்து ஆலோசனை வழங்கி வருகிறது என்று அவர் கூறினார்.
ஜப்பானில் பெரும் அணு விபத்து உண்டாக்கும் ஆபத்தான நிலை: டோக்கியோ வரை கதிர்வீச்சு


டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் 2, 4 ஆகிய இரு உலைகளில் செவ்வாயன்று வெடிப்பு ஏற்பட்டது. 4-வது உலையில் தீ பிடித்தது. இவை அணுமின் நிலையத்தின் நிலைமையை மிகவும் மோசமடையச் செய்துள்ளன. வெடிப்பினைத் தொடர்ந்து, கதிரியக்கம் தாங்கிய பொருள்கள் காற்றில் பரவியுள்ளன. இது மக்களை பாதிக்கும் அளவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சனிக்கிழமை முதல் ஏற்பட்டு வரும் வெடிப்புகளினால் அணு மின் நிலையத்தில் பெரும் அணு விபத்து உண்டாக்கும் ஆபத்தான நிலை எட்டியுள்ளது. ஏற்கெனவே கதிர்வீச்சு தொடங்கிவிட்டது.

இது குறித்துப் பேசுகையில், ""கதிர்வீச்சு மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அளவை எட்டியுள்ளது'' என ஜப்பான் பிரதமர் நவாடோ கான் கூறினார்.

இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு அவர் ஜப்பான் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ""பாதிக்கப்பட்ட அணு நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியத் தொடங்கிவிட்டது. இது காற்று மண்டலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் கசிவு ஏற்படும் பெரும் அபாயம் உள்ளது,'' என அவர் தெரிவித்தார்.

அணுமின் நிலையத்தின் 30 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை பதற்றம் இன்றி அமைதியாக இருக்கும்படி கூறினார். யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இயன்றவரை மின்சாரத்தை சேமிக்குமாறு நவாடோ கான் கேட்டுக் கொண்டார். இப்பிரதேசத்தில் 1,40,000 பேர் வசித்து வருகின்றனர். ஃபுகுஷிமாவின் 3-வது உலையில் உள்ள கதிர்வீச்சின் அளவு சாதாரணமாக ஓராண்டில் மனிதர்களுக்கு ஏற்புள்ள அளவைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாக உள்ளது என அணு சக்தி நிபுணர்கள் கூறியதாக ஜப்பானின் செய்தி நிறுவனம் கியோடோ தெரிவிக்கிறது.

சனிக்கிழமை 1-ம் உலையில் குளிர்விப்பான்கள் பழுதடைந்ததால் முதல் முறையாக வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஹைட்ரஜன் வெளியேறியது. வெடிப்பைத் தொடர்ந்து, அணு நிலையத்தைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை சம்பவங்கள் குறித்து, அந்நாட்டின் தலைமை தகவல் அதிகாரி பேசும் போது, 4-வது உலையில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

செவ்வாயன்று 2, 4 ஆகிய உலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளினால் உண்டான மிக அதிக அளவிலான கதிர்வீச்சு மனித உடல்களுக்கு நிச்சயம் தீங்கு விளைவிக்கும் என அமைச்சரவை தலைமைச் செயலர் யூகியோ எடானோ கூறினார்.

உலைகள் அனைத்தும் இப்போது செயல்பாட்டில் இல்லை. 1,2,3 ஆகிய உலைகளில் மூலப் பொருளின் ஒரு பகுதி உருகியிருக்கக் கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அணுமின் நிலையத்தின் எல்லா மூலப்பொருளும் முற்றிலும் உருகிவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதாக, டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2-வது உலையில் மூலப்பொருள் வைத்துள்ள கான்கிரீட் அமைப்பு இப்போது சீல் வைத்த நிலையில் இல்லை. அடுத்த இரு நாள்களில் இந்தப் பகுதியில் உள்ள காற்றின் போக்கு கதிர்வீச்சு பரவும் விதத்தை தீர்மானிக்கும். இப்போது, இந்த கதிரியக்கம் தாங்கிய பொருள்கள் கடல் பக்கமாகவே காற்றில் பரவி வருகின்றன. ஃபுகுஷிமா பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

டோக்கியோ வரை கதிர்வீச்சு:

செறிவு குறைந்த கதிர்வீச்சு காற்றில் பரவி, தலைநகரான டோக்கியோவை பத்து மணி நேரத்தில் வந்தடையும் என அங்குள்ள பிரெஞ்சு நாட்டுத் தூதரகம் கூறியுள்ளது.
டோக்கியோ நகரம் ஃபுகுஷிமாவிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


மக்களை பதற்றமின்றி அமைதியாக இருக்கும்படி பிரதமர் கூறினாலும், டோக்கியோவிலும், மற்ற நகரங்களிலும் மக்கள் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

டின் பெட்டிகளில் விற்பனையாகும் உணவு வகைகள், பேட்டரி, ரொட்டி, தண்ணீர், பழங்கள் ஆகியவை வேகமாக விற்று வருகின்றன. பெட்ரோல் பம்புகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கார்களில் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். ஒன்றிரண்டு புல்லட் அதிவேக ரயில் இயக்கப்படுவதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அதே போல நகரப் பேருந்துகள் சில மட்டுமே இயக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: