சனி, மார்ச் 19, 2011

கணவனுக்கு எழுத முடியாத கடிதம்..

தன் மனைவியின் கண்களில் காதலைத் தேடும் கணவன், அதே கண்களில் அவள் மனதையும் தேடாமல் இருப்பது எப்படி என்றுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

திருமணமான பிறகும் குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பதில் உனக்கு என்ன சந்தோஷமோ? உன்னை சுற்றியிருக்கும் சுவாரஸ்யங்களைத் தொலைத்து விட்டு எதில் தேடுகிறாய் உன் சந்தோஷத்தை? திருமணத்திற்குப் பிறகு மகன் செய்யும் சின்ன சின்னத் தவறுகளை பெற்றோர்கள் கண்டும், காணாமல்
இருக்கிறார்களா அல்லது இருப்பது போல் நடிக்கிறார்களா? இன்னும் எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான் முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள் அடித்துக்கொண்டால் என்ன? நாம் தப்பித்தோமே என்ற எல்லா ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள் அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு புரிவதில்லை? இப்படி புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.

உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து வந்த எனக்கு, சீர் பொருட்களில் ஏதோ ஒன்று குறைந்ததை பெரிய கெளரவப் பிரச்சினையாக நீ ஆக்கிய போதும், அதையே திரும்ப திரும்ப சொல்லிக்காட்டிய போதும் அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தொண்டையிலும் ஏதோ கசந்தது. என் வாழ்க்கையை வியாபாரமாக்கிய அப்பா, அம்மாவின் மேல் கோபம் வந்தது.

உனக்குத் தெரியுமா? உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல் நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது. உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார் என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?
குழந்தையின் எதிர்காலத்தில் என் அழுகையை அடக்கிக்கொள்கிறேன். அவளின் வளர்ச்சியில் என் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன்.]



கருத்துகள் இல்லை: