திங்கள், செப்டம்பர் 19, 2011

நில அபகரிப்புதான் தி.மு.க.வினரின் சாதனை: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

5 ஆண்டு கால கருணாநிதி ஆட்சியில், தி.மு.க.வினரின் சாதனை நில அபகரிப்புதான் என்று சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாப்புலியூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பேசியது:


5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பெரிதாக சாதனை எதுவும் நிகழ்த்தப்படவில்லை. தி.மு.க.வினர் நிகழ்த்திய பெரிய சாதனை நில அபகரிப்புதான். அதற்காகத்தான் தி.மு.க.வினர் பலர் இன்று சிறைக்குள் இருக்கிறார்கள். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும். சதுர அடி ரூ.2 ஆயிரம் விலையுள்ள நிலத்தை ரூ.100க்கு பதிவு செய்துள்ளனர்.

கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினர். ஆனால் அதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்படவில்லை.

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறப்பு நலத் திட்டங்களால் 25 லட்சம் இல்லத்தரசிகள் பயன் அடைவார்கள். ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த பொருள்களாக முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்.

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் நகராட்சிப் பகுதிகளுக்கு ரூ.230 கோடியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

கல்வியால் மட்டுமே சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும். அதற்காகத்தான் மாணவர்களுக்கு மடிக் கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

கடலூர் பசுமை நகராட்சியாக மாற்றப்படும். ரயில்வே சுரங்கப்பாதை திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடலூரில் நிறைவேற்றப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதம் வெற்றி பெறும் என்றார் எம்.சி. சம்பத்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் குமார், மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் சீனிவாச ராஜா, மாவட்ட மீனவரணிச் செயலாளர் தங்கமணி, ஒன்றியச் செயலாளர் பழநிச்சாமி, நகரச் செயலாளர் குமரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கருத்துகள் இல்லை: