திங்கள், அக்டோபர் 03, 2011

நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கனக்கான அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் உடனடியாக நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் நியூயோர்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டனர்.


இந்த முற்றுகைப் போராட்டம் பாஸ்டன் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவி வருகிறது. அமெரிக்காவில் 2008ல் நிகழ்ந்த வங்கிகளின் திவாலானது, அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வேலை பறிபோனது உள்ளிட்டவற்றை சரி செய்யக் கோரியும், நிதி சீர்திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ளக் கோரியும் “வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” என்ற அமைப்பு கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் எகிப்து பாணியில் போராட்டங்களைத் துவக்கியது.

நியூயார்க் நகரின் முக்கிய பகுதியான வால் ஸ்ட்ரீட்டை  ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோள். அதன்படி வால் ஸ்ட்ரீட்  அருகில் உள்ள சதுக்கம் ஒன்றில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் ஆயிரக்கணக்கானோர் கூடாரம் போட்டுத் தங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடந்த பேரணியில் போலீசார் 80 பேரை கைது செய்ததைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், நியூயார்க் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள போலீஸ் தலைமையகத்தை நோக்கி நேற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர்.

இந்தப் போராட்டம் தற்போது பாஸ்டன், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்களுக்கும் பரவி வருகிறது. வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் அமெரிக்க அரசியலில் தற்போது அதிகரித்துள்ள தனியார் நிறுவனங்களின் தலையீட்டைக் குறைக்க அதிபர் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்பது தான்.

இக்குழுவினரின் இணையதளத்தில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், இன்னும் சில வாரங்களுக்கு வால் ஸ்ட்ரீட்டில் தங்கள் முற்றுகை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: