திங்கள், அக்டோபர் 10, 2011

சொஹ்ரபுதீன் ஷேக்:தப்பிச்சென்ற முக்கிய சாட்சி கைது

சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான சில்வெஸ்டர் டேனியல் மீண்டும் கைதுச் செய்யப்பட்டார்.

போலீஸ் காவலிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் சில்வெஸ்டர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து போலீஸ் கைதுச் செய்துள்ளது.
கைதுச் செய்யப்படும் வேளையில் சில்வெஸ்டர் வசம் துப்பாக்கி இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. உதய்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிவரும் வேளையில் சில்வெஸ்டர் போலீஸ் காவலிலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

2005-ஆம் ஆண்டு நவம்பர்26-ஆம் தேதி சொஹ்ரபுதீன் ஷேக் கொல்லப்பட்டார். பின்னர் அவருடைய மனைவியும் கொல்லப்பட்டார். இதுத் தொடர்பான முக்கிய விபரங்களை சில்வெஸ்டர் டேனியலால் அளிக்க இயலும் என போலீஸ் கருதுகிறது. இதற்கிடையே சில்வெஸ்டர் டேனியல் தப்பிச் சென்றது தொடர்பாக நான்கு போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் அஜாக்கிரதையின் காரணமாக சில்வெஸ்டர் தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியை கொலைச் செய்ய திட்டமிட்ட போராளி இயக்கத்துடன் சொஹ்ரபுதீன் ஷேக்கிற்கு தொடர்பிருப்பதாக குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை குற்றம் சாட்டியிருந்தது. ஆனால்,ஷொஹ்ரபுதீனும்,அவருடைய மனைவி கெளஸர் பீயும் தவறுதலாக கொல்லப்பட்டதாக குஜராத் அரசு 2007-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் தற்பொழுது சிறையில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: