செவ்வாய், அக்டோபர் 18, 2011

ஹஸாரே குழுவிலிருந்து பிரசாந்த் பூஷணை வெளியேற்ற முயற்சி

பிரசாந்த் பூஷணை ஹஸாரே குழுவிலிருந்து நீக்க திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது.

கஷ்மீர் விவகாரத்தில் பகிரங்கமாக தேசவிரோத அறிக்கை வெளியிட்டதாக குற்றம் சாட்டி இந்த முயற்சி நடைபெறுகிறது. ஹஸாரே குழுவில் கருத்துவேறுபாடு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஹஸாரே தந்திரமாக ஒருவார கால மெளனவிரதத்தை துவக்கியுள்ளார்.
கடுமையான கருத்து வேறுபாடுகள் ஹஸாரே குழுவினர் மத்தியில் உள்ளதாக அரவிந்த் கேஜ்ரவால் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரத்திற்கு இறங்கிய நடவடிக்கை சரியில்லை என ஹஸாரே குழுவைச் சார்ந்த சந்தோஷ் ஹெக்டே ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். இதனால் ஹஸாரேவின் எதிர்கால செயல்பாடுகள் மீது கருமை படிந்துள்ளது.

ஜம்மு-கஷ்மீர் மக்களை இந்தியாவுடன் இணைந்து இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும், அதற்கு இயலாவிட்டால் விருப்ப வாக்கெடுப்பு மூலம் மக்களின் விருப்பத்தை அங்கீகரிக்க தயாராக வேண்டும் என பிரசாந்த் பூஷண் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் ஹஸாரே,கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி எனவும் விருப்பவாக்கெடுப்பு என்பது பிரசாந்த் பூஷணின் கருத்து எனவும் தெரிவித்திருந்தார்.

என்ன விலை கொடுத்தாவது பிரசாந்த் பூஷணை ஹஸாரே குழுவிலிருந்து நீக்கவேண்டும் என ஹஸாரே மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தனது குழுவில் பிரசாந்த் பூஷண் நீடிப்பார் என முதலில் தெரிவித்த ஹஸாரே பின்னர் பல்டியடித்தார். ‘நாட்டில் பிரிவினை வாதத்தை எழுப்பும் எந்த அறிக்கைக்கும் நான் எதிரானவன். பிரசாந்த் பூஷண் அவ்வாறு கூறியது துரதிர்ஷ்டவசமானது. எனது குழுவில் பிரசாந்த் பூஷண் தொடர்வது குறித்து மத்தியக்குழு தீர்மானிக்கும்’ என நேற்று முன்தினம் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஹஸாரே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஹஸாரே கூறியதிலிருந்தே பிரசாந்த் பூஷணை அவரது குழுவிலிருந்து நீக்குவது உறுதியாகியுள்ளது. ஹஸாரேயின் பல்டி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: