வியாழன், நவம்பர் 17, 2011

குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க…..

இந்தியாவில் மேல்நிலைக்கல்வி படிக்கும் 90-விழுக்காடு மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது முதல் இலக்கா
க இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகளில் போதிய இடங்கள் இல்லை. மருத்துவர்களின் தேவை இருந்தாலும் மாணவர் சேர்க்கை கெடுபிடிகள் அதிகம்.

இந்திய அளவில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைமை இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 6 லட்சம் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 31 ஆயிரத்து 172 எம்பிபிஎஸ் சீட்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன.
இதனால் எம்பிபிஎஸ் படிப்புக்கு அதிக கிராக்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண், ரேங்க் எண் வழங்கப்பட்டு கவுன்சலிங் நடத்தப்படுகிறது. உச்சபட்ச மதிப்பெண் பெற்றவர்கள் சீட்களை தட்டிச் சென்று விடுகின்றனர். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவை வளர்த்தவர்கள் மதிப்பெண் குறைவு காரணமாக வேறு வழியின்றி மாற்று படிப்புகளை தேர்வு செய்கின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும் என்ற வழிமுறைகள் பலருக்கு தெரிவதில்லை.

ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ், பல்கேரியா, செக்குடியரசு, ருமேனியா, அர்மேனியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ படிப்புக்கு இந்திய மாணவர்களை வரவேற்கின்றன. அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடிக்க ரூ.1.25 கோடி வரை செலவாகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மொழி, விசா பிரச்சினை, அதிக கட்டணம் போன்றவற்றால் இங்கு மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. பொதுவாக பிரிட்டிஷ், அமெரிக்க பாடத்திட்டம் என இரு பாடத்திட்டங்கள் மூலமாகவே உலகம் முழுவதும் மருத்துவ கல்வி போதிக்கப்படுகிறது.

இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு எம்டி படிக்க வேண்டும் என்ற நிலையில், வெளிநாடுகளில் ஆரம்பத்திலேயே எம்டி படிப்பு கற்றுத் தரப்படுகிறது. இப்படிப்புகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் குறிப்பிட்ட துறைகளில் சிறப்பு பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் ஹவுஸ் சர்ஜனாக ஒரு ஆண்டு பணிபுரிய வேண்டும் என்றால், வெளிநாடுகளில் மூன்றரை ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்கில புலமை, சீதோஷ்ண நிலை, இன மோதல் உள்ளிட்ட எவ்வித பிரச்சினையும் இல்லாமல் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளதால் இந்திய மாணவ, மாணவிகளின் பார்வை அந்நாட்டின் மீது திரும்பி வருகிறது.

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தாலும் இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இங்கு மருத்துவர்களாக பணி யாற்ற முடியும். இத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பரில் நடைபெறும். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்ற 8 ஆயிரம் நபர்களில் 1200 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பிலிப்பைன்ஸில் படித்தவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் மருத்துவ படிப்புகளில் சேர்பவர்களுக்கு முதல் ஆண்டு படிப்பு மட்டும் புனேயில் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நெல்லை, கோவை, மதுரை, திருச்சி பகுதி மாணவ, மாணவிகள் அதிகளவில் அங்கு மருத்துவம் படிக்க விண்ணப்பித்து வருகின்றனர். பொதுவாக அனைத்து வசதிகளை கணக்கிட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இணையதளங்களில் இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை: