புதன், நவம்பர் 23, 2011

மூளை குருதிக் குழாய் அடைப்பை நீக்க புதிய சிகிச்சை

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் கே.கணேஷ் பாபுவின் (37) மூளை குருதிக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை,
 திறந்த நிலை அறுவைச் சிகிச்சை இன்றி நவீன சிகிச்சை மூலம் அகற்றி சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

 இது தொடர்பாக மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ், தலைமை கதிரியக்க சிகிச்சை நிபுணர் கே.முரளி ஆகியோர் செய்தியாளர்களிடம் கடந்த சனிக்கிழமை கூறியதாவது:-

கணேஷுக்கு கடந்த 7ஆம் தேதியன்று திடீரென மயக்கம்-நினைவிழப்பு ஏற்பட்டது. உடனே அவரது மனைவி ராதிகா கணேஷ், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு செய்யப்பட்ட எம்.ஆர்.அய். ஸ்கேன் பரிசோதனையில், தலையின் பின்புறம் உள்ள சிறு மூளையிலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய குருதிக் குழாயில் முழுமையான அளவில் அடைப்பு (ஸ்ட்ரோக்’) ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதயம்-நுரையீரல் ஆகியவற்றுடன் இந்த குருதிக் குழாய்க்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கணேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக செயற்கை சுவாசம் அளிப்பது உள்பட அவரை சிகிச்சைக்கு தயார்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவரை கேத் லேப்புக்கு அழைத்துச் சென்று, தொடைப் பகுதியில் துளை ஏற்படுத்தி சிறிய கதீட்டர் குழாயை நுழைத்து, அதன் மூலம் மூளை குருதிக் குழாய் அடைப்பை நீக்கும் நவீன ஸ்டென்ட் (கம்பி போன்ற அமைப்பு) கொண்டு செல்லப்பட்டது.

மூளை குருதிக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டவுடன், ஸ்டென்ட்’ அமைப்பு அங்கிருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டது. திறந்த நிலை அறுவைச் சிகிச்சை எதுவும் இன்றி, நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் உறுதுணையுடன் ஒரு மணி நேரத்தில் இந்த புதிய ஸ்டென்ட்’ சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த அடுத்த நாள் முதல் கணேஷ் பாபு நன்றாக சாப்பிடத் தொடங்கி விட்டார். புகை பழக்கத்தை முழுமையாக நிறுத்தி விடுமாறு கணேஷ் பாபுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொன்னான நேரம்: ஒருவருக்கு குருதிக் குழாய் அடைப்பு காரணமாக தலை சுற்றல், நினைவிழப்பு ஆகியவை ஏற்படும் நிலையில், உறவினர்கள் காலதாமதம் ஏதுமின்றி 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை அல்லது புதிய சிகிச்சை அளித்து நோயாளிக்கு பக்கவாதம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: