திங்கள், டிசம்பர் 05, 2011

பா.ஜ.கவினரின் அடாவடி: தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு

பெரியாறு அணை அருகே ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் கேரள இளைஞர் பிரிவினர் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம்
 செய்ததை தொடர்ந்து, தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. இளைஞரணி இடுக்கி மாவட்டத் தலைவர் ரதீஷ், மண்டலப் பொறுப்பாளர்கள் சந்தோஷ்குமார், மனோஜ் ஆகியோர் தலைமையில் 18 பேர், கட்சிக் கொடிகள், மண்வெட்டி, கடப்பாறை, மண் அள்ளும் கூடை ஆகியவற்றுடன் பேபி அணையை உடைத்து தண்ணீரை வெளியேற்றப் போவதாகக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெரியாறு புலிகள் சரணாலய வனப் பகுதி வழியாக பகல் 12 மணியளவில் பேபி அணைப் பகுதிக்குள் நுழைந்தனர்.

தகவலறிந்து, பிரதான அணை பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீஸார் பேபி அணைக்குச் சென்றனர்.

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, அணைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஆய்வு மாளிகைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
பேபி அணையை உடைத்தால் பெரியாறு அணையில் 120 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால், அணை உடைப்புப் போராட்டம் நடத்தியதாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பேபி அணைப் பகுதியில் அணை உடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க. இளைஞரணி சார்பில் 30 பேர் கொண்ட 2 குழுக்கள் அதிகாலையிலேயே வனப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்தது விசாரணையின்போது தெரிய வந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களை குமுளி காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்வதற்கு படகு மூலம் தேக்கடி படகுத் துறைக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கூடி நின்று, கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி போலீஸாரை முற்றுகையிட்டனர். மேலதிகாரிகளை தொடர்புகொண்ட போலீஸார், கைது செய்யப்பட்ட 18 பேரையும் படகுத் துறை பகுதியிலேயே
விடுவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை பா.ஜ.க.வினர் குமுளி வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

பெரியாறு புலிகள் சரணாலய வனப் பகுதியிலும், தேக்கடி வனப் பகுதியிலும் வனத் துறையினர் மற்றும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வனப் பகுதியில் நுழைந்த சம்பவத்தால், அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பெரியாறு அணை பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள பா.ஜ.கவினரின் அடாவடிக்கு தமிழகத்தில் உள்ள பா.ஜ.கவினர் மெளனம் சாதிக்கின்றனர். ஏற்கனவே ஒகேனக்கல் பிரச்சனை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் சூடுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: