செவ்வாய், டிசம்பர் 06, 2011

கடலூரில் அரசு விழாவில் நாற்காலிக்காகஅல்லாடிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,

கடலூரில் நடந்த மாநில அளவிலான அரசு விழாவில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ., நாற்காலி கிடைக்காமல் அல்லாடினார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில், மாநில அளவிலான முதியோர் தின விழா, நேற்று கடலூரில் நடந்தது. அமைச்சர்கள், துறை செயலர், இயக்குனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த விழா மேடையின் முதல் வரிசையில் அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம், எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், கலெக்டர் அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்தனர்.

 
விழா துவங்கியதும், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசுவதற்காக மைக் அருகே சென்றார். அவரது நாற்காலி காலியாக இருந்ததால் அதில், பின் வரிசையில் இருந்த விருத்தாசலம் நகராட்சி சேர்மன் அரங்கநாதன் அமர்ந்தார்.பாலகிருஷ்ணன் பேசி முடித்ததும், அவருக்கு காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி எம்.எல்.ஏ., முருகுமாறன் தனது இருக்கையை விட்டுக் கொடுத்து பேசச் சென்றார்.

பேசி முடித்துவிட்டு வந்த போது, நாற்காலி எதுவும் காலியாக இல்லாததால், சற்று நேரம் திகைத்து நின்றார்.பின்னர், சிவசுப்ரமணியன் எம்.எல்.ஏ., பேசச் சென்றதும், அவரது நாற்காலியில் அமர்ந்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் பேசி முடித்ததும், அவர்களுக்கு நாற்காலியை விட்டுக் கொடுத்து, அடுத்து பேசச் சென்றவர்களின் இருக்கையில் அமர்ந்தனர்.ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., நாற்காலி கிடைக்காமல் அல்லாடிய போதிலும், நாற்காலி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையாக இருந்தது.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை: