ஞாயிறு, மார்ச் 27, 2011

லிபியா:எதிர்ப்பாளர்கள் அஜ்தாபியாவை மீட்டனர்

 

லிபியாவில் முக்கிய எண்ணெய் நகரமான அஜ்தாபியாவை கத்தாஃபி ராணுவத்திடமிருந்து எதிர்ப்பாளர்கள் மீட்டுள்ளனர்.

ராணுவ டாங்குகள் மீது ஏறி எதிர்ப்பாளர்கள் வெற்றியைக் கொண்டாடும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பல நாட்கள் நீண்ட தாக்குதல்களுக்கு பிறகு ஒரு வாரத்திற்கு முன்புதான் கத்தாஃபியின்
ராணுவம் இப்பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை தன் வசப்படுத்தியிருந்தது.மற்றொரு நகரமான ப்ரீகாவுக்கு எதிர்ப்பாளர்களின் ராணுவம் முன்னேறுகிறது.

நகரத்தின் நுழைவாயிலில் 25க்கும் மேற்பட்ட ராணுவ டாங்குகளும், வாகனங்களையும் விட்டுவிட்டு கத்தாஃபியின் ஆதரவாளர்கள் பின்வாங்கியுள்ளனர். கத்தாஃபி ராணுவத்தின் உடல்கள் சிதறிக் கிடப்பதாக பி.பி.சி கூறுகிறது.

கார் ஹாரனை முழக்கியும்,வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் எதிர்ப்பாளர்கள் வெற்றியை கொண்டாடினர். நகரத்தின் மேற்குபகுதியில் நெடுநேரம் தாக்குப்பிடித்த பிறகு கத்தாஃபியின் ராணுவம் பின்வாங்கியது. அதேவேளையில், நேற்று திரிபோலியில் மேற்கத்திய நாடுகளின் விமானங்கள் பலத்த குண்டுவீச்சில் ஈடுபட்டன.

கத்தாஃபியின் ராணுவத்தினுடைய ரேடார் நிலையம் தீப்பற்றியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.

ராணுவத்தின் பணி வெற்றிப் பெற்றதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். தரைப் படையை அனுப்பமாட்டோம். ராணுவம் தனது பணியை தொடர்கிறது.கத்தாஃபியின் ராணுவத்தால் கூடுதல் காலம் தாக்குப்பிடிக்க முடியாது. லிபியா விவகாரத்தில் கூட்டணிப் படையினருக்கு தவறு நேர்ந்து விடவில்லை.கத்தாஃபியை கொல்வதற்கு நோக்கமில்லை என அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுடனான விவாதத்தில் ஒபாமா தெரிவித்தார்.

இதற்கிடையே,எத்தியோப்பியாவில் ஆப்பிரிக்க யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்த வருகைத் தந்த லிபியாவின் பிரதிநிதிகள் மேற்கத்திய ராணுவத்தின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினர். பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆப்பிரிக்க யூனியன் தயார் செய்யும் திட்டத்தை அங்கீகரிப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: