வெள்ளி, ஏப்ரல் 08, 2011

கஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி


கஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலியானார். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
ஸ்ரீநகரில் மைசூமா பகுதியில் பிரபல மசூதி உள்ளது.இங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு மசூதிக்கு வெளியே வெடித்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் அதிர்ச்சியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் காயமுற்றவர்கள் முழு விவரம் இன்னும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.

ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவரான மௌலவி சவுகத் அகமது ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். காயமுற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்னர்.
மசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் குறித்த விவரம் போலீசாரால் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: