சனி, ஆகஸ்ட் 27, 2011

அன்னா ஹஸாரே குழுவில் பிளவு

ஜனலோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் வேளையில் அன்னா ஹஸாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அன்னா ஹஸாரேவின் உடனிருப்பவர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்வதாக
சுட்டிக்காட்டி ஹஸாரே குழுவில் முக்கிய நபரும், கர்நாடாக லோகாயுக்தாவின் முன்னாள் தலைவருமான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். அரவிந்த் கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் ஹஸாரேவை தவறாக புரியவைக்கின்றனர் என சுட்டிக்காட்டி இன்னொரு நபரான சுவாமி அக்னிவேஷும் கூறியுள்ளார்.
பிரச்சனையை தீர்ப்பதற்கு கிரண்பேடிக்கும், கேஜ்ரவாலிற்கும் விருப்பமில்லை என அக்னிவேஷ் குற்றம் சாட்டினார்.
அன்னா ஹஸாரே உடனடியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என ஹெக்டே வலியுறுத்தியுள்ளார்.  “நல்ல நோக்கத்திற்கான ஆயுதமாக அன்னா ஹஸாரேவை உபயோகப்படுத்தும் வேளையில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். அவருடன் இருப்பவர்கள் பலருக்கும் சொந்தமாக அஜண்டாக்கள் உள்ளன. நான் அன்னாவின் குழுவில் இல்லாதவனோ? என எனக்கு பலவேளைகளிலும் தோன்றியுள்ளது. அன்னாவுடன் நிற்கும்போதும் நான் விலகியிருப்பதாகவே உணர்கிறேன். அன்னாவை அரசு கையாளும் முறை சரியல்ல. மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என நேற்று முன்தினம் பிரதமர் கூறினார். பின்னர் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், நோட்டீஸ் அளிக்காததால் இன்று விவாதிக்ககூட முடியாது என்கிறார். கடந்த 10 தினங்களாக இந்நிலைமை தொடர்கிறது.” இவ்வாறு ஹெக்டே தெரிவித்துள்ளார்.
சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், “சிலர் அன்னாவின் போராட்டத்தை ஹைஜாக் செய்துள்ளார்கள். பிரதமர் மசோதா தொடர்பாக உறுதி அளித்துள்ள சூழலில் ஹஸாரே போராட்டத்தை முடித்திருக்க வேண்டும். கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் அன்னாவை தவறாக புரியவைக்கின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் இருவருக்கும் விருப்பமில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை ஊழல் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு புகழ்பெற்ற முனிசிபல் முன்னாள் கமிஷனர் கைர்னார் ஹஸாரேவின் போராட்டம் ஏமாற்று என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: