திங்கள், செப்டம்பர் 26, 2011

இன்சூரன்ஸ் நிறுவன பொருள்கள் ஜப்தி

விபத்து வழக்கு ஒன்றில் நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் கிளை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பொருள்கள் அண்மையில் ஜப்தி செய்யப்பட்டன.


சிதம்பரம் மெய்காவல்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (50). இவர் கடந்த 2009-ம் ஆண்டு மெய்க்காவல்தெருவில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த லாரி மோதி இறந்தார்.

நஷ்டஈடு கோரி ராமலிங்கம் மனைவி வசந்தா, சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிந்த நிலையில், ரூ.11 லட்சத்து 86 ஆயிரத்து 454-ஐ நஷ்டஈடாக வழங்குமாறு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீர்ப்பளித்து பல மாதங்கள் ஆகியும் இழப்பீடு தொகை வழங்காததால் உத்தரவை நிறைவேற்றுமாறு நீதிமன்றத்தில் வசந்தா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு யூனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, சிதம்பரம் தெற்குவீதி ஸ்டார் காம்ப்ளக்ஸில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நாற்காலி, மேஜை, கணினி உள்ளிட்ட பொருள்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

கருத்துகள் இல்லை: