ஞாயிறு, அக்டோபர் 09, 2011

முஸ்லிம்களுக்கு எதிரான பொய் வழக்குகளில் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் – ராம்விலாஸ் பஸ்வான்

இந்தியாவில் குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போடும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வழக்குகளில் விரைவில் தீர்ப்பளிக்க அதிவிரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும். பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீன் தொடர்பு என குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார் பஸ்வான்.

அப்பொழுது அவர் கூறியதாவது:நிரபராதிகளான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வழக்குகளில் ஒருவருட கால வரம்பை நிர்ணயித்து தீர்ப்பளிக்க வேண்டும். நிரபராதிகள் என கண்டறிந்தால் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து இழப்பீடு வழங்கவேண்டும். இதனை கோரி பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்திப்பேன்.

டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்படும். நவம்பர் 30-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடத்தப்படும். இத்தகைய வழக்குகளை பரிசோதிக்க லோக் ஜனசக்தி ஆறு உறுப்பினர்களை கொண்ட குழுவை நியமித்துள்ளது.

ஒவ்வொரு குண்டுவெடிப்புகளுக்கு பிறகும் முஸ்லிம்களை நோக்கியே விசாரணை நடைபெறுகிறது. ஆஸம்கரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களையெல்லாம் போலீஸ் ஒவ்வொரு வழக்கிலும் உட்படுத்தி கொடுமைப்படுத்துகிறது. ஆஸம்கரில் பிறந்தவர்களெல்லாம் தீவிரவாதிகளாக கருதி புலனாய்வு அதிகாரிகள் நடந்துகொள்கின்றனர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என நிரூபணமான அஜ்மீர், ஹைதராபாத் குண்டுவெடிப்புகளின் பெயரால் ஏராளமான முஸ்லிம்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் முஸ்லிம்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் அதிகாரிகளை தண்டிக்க சிறப்பு சட்டம் தேவை. நிரபராதிகளை பொய்வழக்கில் சிக்கவைக்கும் அதிகாரிகளை தண்டிக்க தற்போது சட்டம் அமுலில் இல்லை.

அதிகாரிகள் ஆதாரங்களை இட்டுக்கட்டுகின்றனர். பயங்கரவாத வழக்குகளில் நீதியின் அடிப்படையிலான விசாரணை நடைபெறுகிறது என்பதை உறுதிச்செய்ய அரசுக்கு கடமை உண்டு.

உத்தராகண்டில் ருத்ராபூரில் நடந்த வகுப்பு மோதலைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும். சிறுபான்மையினரை பாதுகாக்க எதுவும் செய்யாததால் சி.பி.ஐ விசாரணையை குறித்து உத்தராகண்ட் அரசு அஞ்சுகிறது. இவ்வாறு பஸ்வான் கூறினார்.

கருத்துகள் இல்லை: