சனி, அக்டோபர் 08, 2011

மார்க்சிஸ்ட்-தேமுதிக கூட்டணிக்கு வரவேற்பு: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ

 மார்க்சிஸ்ட்-தேமுதிக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


 சிதம்பரம் நகராட்சித் தலைவர் மார்க்சிஸ்ட் வேட்பளர் ஹெச்.பௌஜியாபேகம் மற்றும் கூட்டணிக் கட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர் மன்றத்தில் வியாழக்கிழமை அவர் பேசியது:
 
 மார்க்சிஸ்ட், தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இப்புதிய கூட்டணிக்கு, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் நேர்மையான, மோசடியற்ற, நியாயமானதாக இருக்கும் என நம்புகிறோம்.
 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு மொத்த வருவாயில் 9 சதவீதம்தான் நிதி ஒதுக்கீடு செய்கிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளுமே உள்ளாட்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் வழங்கவில்லை. மாநில அரசின் அதிகாரம் பறிபோய்விடும் என இவை செயல்பட்டு வருகின்றன.
 
 எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும், அதிகாரத்தையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். இதுகுறித்து இதுவரை தமிழகத்தை ஆளும் கட்சி கண்டு கொள்ளவில்லை.
 
 சிதம்பரம் நகராட்சியில் ரூ. ஒன்றரை கோடி கையாடல் நடைபெற்றது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நானும் முதல்வரிடம் கடிதம் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களே தலைவரை நேரடியாக தேர்ந்தெடுக்க உள்ளனர். எங்கள் கூட்டணியை வெற்றிபெறச் செய்தால் மார்க்சிஸ்ட் கட்சி சுதந்திரமான, நேர்மையான, திறமையான, ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கும் என்றார்.
 
தேமுதிக மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பாலு, நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார், மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக்குழு உறுப்பினர் வி.நடராஜன், நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், இணைப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
"ஆளுங்கட்சியினர் தடுத்துவிட்டனர்'
 
 நகராட்சி தலைவர் வேட்பாளர் ஹெச்.பௌஜியாபேகம் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவினர் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்ய விடாமல் தடுத்துவிட்டனர். குறிப்பாக ரூ.44 கோடிக்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை தயாரித்து, அரசு அனுமதி பெற்று நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசியல் காரணமாக நகரில் எந்த சாலையும் போடக்கூடாது எனக்கூறி அத்திட்டத்தை அப்போதைய ஆளும் திமுக அரசு ரத்து செய்துவிட்டது.
 
 அதன் பின், பொதுநிதி உள்ளிட்ட பல்வேறு நிதியைக் கொண்டு நகரில் ரூ.5 கோடிக்கு சிமென்ட் மற்றும் தார் சாலைகளை அமைத்தேன். நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை: