ஞாயிறு, அக்டோபர் 09, 2011

இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!

இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து இறக்கி விட்டது அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ். இதனால் அவமானமடைந்த அப்பெண், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது சான் டியாகோ நீதிமன்றத்தில் வியாழனன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தான் தலை முக்காடு அணிந்திருந்த ஒரே காரணத்துக்காக, அநியாயமாக நடத்தப்பட்டதாக அவர் வழக்கில் தெரிவித்துள்ளார். இச்செய்தியை வழக்கறிஞர் ஜேம்ஸ் மெக்எல்ராய் தெரிவித்தார்.

இரம் அப்பாஸி சான் ஜோஸ் மாநில பல்கலைகழகத்தில் சைக்காலஜி படிக்கும் அமெரிக்க மாணவியாவார். மூன்று பிள்ளைகளின் தாயான அவர், விமானத்தில் ஏறி அமர்ந்ததும் கைபேசியில் பேசியதைக் கேட்ட ஒரு விமானச் சிப்பந்தி, அவர் “போகலாம்” என்று சொன்னதைக் கேட்டு சந்தேகப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்க, விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டு மூன்று நிமிட சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

சோதனைக்குப் பின் அவரிடம் மன்னிப்பு கேட்டு பயணத்தைத் தொடருமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கூறிய போதிலும், விமான இயக்குநர் ‘விமான ஊழியர்கள் விரும்பவில்லை’ என்று கூறி அப்பாஸி விமானம் ஏறவிடாமல் தடுத்தார். இதனால், நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் செல்லும்படி வேறொரு இருக்கைச் சீட்டை(Boarding Pass) அவருக்கு விமான நிறுவனம் வழங்கியதாம்.

ஆயினும், தன் படிப்பு சம்பந்தமான, தேர்வுக்குத் தேவையான முக்கியமான ஆராய்ச்சியை இதனால் தான் தவறவிட்டதாகக் கூறும் அப்பாஸி “அந்த நிமிடங்கள் நான் அலைகழிக்கப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், வெறுப்புக்கும், குழப்பத்திற்கும் ஆளாக்கப்பட்டேன்” என்று காட்டம் தெரிவித்துள்ளார்.

அந்த விமான நிறுவனத்தின் பிரதிநிதியான கிரிஸ் மெய்ன்ஸ்; நன்னம்பிக்கையின் அடிப்படையில் தாங்கள் மீண்டும் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: