திங்கள், அக்டோபர் 10, 2011

சிதம்பரம் நகராட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி

சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும்
 மேற்கொள்ளவில்லை; சுகாதார சீர்கேட்டில் சிதம்பரம் நகர் சிக்கித் தவிக்கிறது என மக்கள் அதிருப்தி தெரிவிக்கும் நிலையில், நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றப் போவது யார் என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது.


 கடந்த 25-3-1973-ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது சிதம்பரம். பழமை வாய்ந்த இந்த நகராட்சி 1998 முதல் தேர்வு நிலை நகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டது. 2011 கணக்கெடுப்பின்படி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 62,168. தொடக்கத்தில் இங்கு 10 வார்டுகள் மட்டுமே இருந்தது. இப்போது 33 வார்டுகள் உள்ளன.


 சிதம்பரம் நகராட்சி பகுதியில் மொத்தம் 42,607 வாக்காளர்கள் உள்ளனர். 33 வார்டுகளில் தலா ஒரு ஆதிதிராவிடர் பெண் வார்டும், ஆதிதிராவிடர் பொது வார்டும் உள்ளன. மேலும் பெண்கள் (பொது) வார்டு 10, பொது வார்டுகள் 21 ஆகியவை உள்ளன.


 நகராட்சித் தலைவர் பதவிக்கு எஸ்.நிர்மலா (அதிமுக), ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட்), செ.எழில்மதி (திமுக), எஸ்.நாகவள்ளி (பாமக), டாக்டர் எஸ்.செந்தில்வள்ளி (காங்கிரஸ்), சு.தனலட்சுமி (விடுதலைச் சிறுத்தைகள்), கே.ஜோதிலட்சுமி (மதிமுக), எம்.மாலா (லோக்ஜனசக்தி) ஆகியோரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 214 பேரும் போட்டியிடுகின்றனர். தேமுதிக-மார்க்சிஸ்ட் தவிர மற்றவை அனைத்தும் தனித்து போட்டியிடுகின்றன.


 அதிமுக வேட்பாளர் எஸ்.நிர்மலா, தேமுதிக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஹெச்.பௌஜியாபேகம் ஆகிய இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இறுதிக் கட்டத்தில் கட்சிக் கட்டளையை ஏற்று வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செ.எழில்மதி 3-வது இடத்தில் உள்ளார்.


 அதிமுகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டன. நிதி நெருக்கடி, தொண்டர்களின் அதிருப்தியால் திமுக பிரசாரம் தொய்வாகவே உள்ளது.


 எஸ்.நிர்மலா (35), அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தரின் மனைவியாவார். எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ள இவர், அரசியலுக்கு புதுமுகம் என்றாலும் இவரது கணவரின் அரசியல் அனுபவம் இவருக்கு கைகொடுக்கும்.


 சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கேட்டார் சுந்தர். ஆனால் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இப்போது மனைவிக்கு நகராட்சித் தலைவர் பதவிக்கான சீட் கிடைத்ததால் உற்சாகமடைந்துள்ளார்.


 இவருக்கு ஆதரவாக அமைச்சர் செல்விராமஜெயம், மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் உள்ளிட்டோர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.


 ஹெச்.பௌஜியாபேகம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 4-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திமுக, காங்கிரஸ் ஆதரவால் நகராட்சி தலைவரானார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இருப்பினும் நகர வளர்ச்சிக்கான எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது.


 பாதாள சாக்கடை, சாலைப்பணி செய்ய முடியாததற்கு திமுகவினரே காரணம் என்பது இவரது குற்றச்சாட்டு. தான் மீண்டும் வெற்றி பெற்றால் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவேன் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.


 திமுக சார்பில் செ.எழில்மதி போட்டியிடுகிறார். பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், 1996-2001-ல் 21-வது வார்டு உறுப்பினராகவும், 2001-2006-ல் 18-வது வார்டு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.


 மாவட்ட திமுக மகளிரணி துணைச் செயலாளரான இவர், இறுதிக் கட்டத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். போதிய பணபலம் இன்றி, கட்சியை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.


 காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் எஸ்.செந்தில்வள்ளி (38), பாமக வேட்பாளராக அக்கட்சியின் நகரச் செயலாளர் முத்து.குமார் மனைவி எஸ்.நாகவள்ளி (28), மதிமுக வேட்பாளராக கே.ஜோதிலட்சுமி (29), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக சு.தனலட்சுமி (32), லோக்ஜனசக்தி வேட்பாளராக எம்.மாலா (38) ஆகியோரும் களத்தில் உள்ளனர்.


 இருப்பினும், அதிமுக-தேமுதிக, மார்க்சிஸ்ட் கூட்டணி கட்சியிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவின் போது நாம் யார் என்பதை தெரிய வைப்போம் என நடக்கும் அனைத்தையும் மௌனமாக பார்த்துக்கொண்டுள்ளனர்.


 அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் முடிவு எப்படி இருக்கும் என கணிப்பது அவ்வளவு சுலபமல்ல.

 சிதம்பரத்தில் வன்னியர், ஆதிதிராவிடர், பிராமணர், தீட்சிதர்கள், பிள்ளை, செட்டியார், முதலியார், விஸ்வகர்மா, மீனவர்கள், யாதவர்கள் உள்ளிட்டோரும், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் வசிக்கின்றனர்.


 சிறுபான்மை சமுதாய வாக்காளர்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். எனவே அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. யார் வென்றாலும் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடியும் என்பதே இன்றைய நிலை.

கருத்துகள் இல்லை: