திங்கள், அக்டோபர் 10, 2011

எங்க தெருவ காணோம்...!


ஒரு படத்தில், ஒரு கிராமமே காணாமல் போனது போல், இன்னொரு படத்தில் கிணறு காணாமல் போனதை போல் பரங்கிப்பேட்டை நகர வாக்காளர் பட்டியலில், பல தெருக்கள் காணாமல் போனதால், அப்பகுதி மக்கள் தமது தெருக்களை பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கின்றனர். 
 
பரங்கிப்பேட்டை நகரம் நகராட்சி அந்தஸ்து பெறுவதற்கு முழு தகுதியுடைய வளர்ந்த நகரமாக உள்ளது. ஏறக்குறைய 150 தெருககள், பல புதிய நகர்களை உள்ளடக்கி ஒரு இலட்சத்திற்கும் நெருக்கமாக மக்கள் தொகை கொண்ட ஒரு பெருநகரம் இது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், வாக்காளர் பட்டியலிலும் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையை பதிய வைக்கப்பட்டுள்ளன. இந் நகரை ஆண்டவர்களும் இது குறித்து நடவடிக்கை எடுத்தார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!. 
 
அதில் உச்சக்கட்டமாக பல வார்டுகளில் பல தெருக்கள் நீக்கப்பட்டு, மற்ற தெருக்களுடன் சிலரை இணைத்தும், அதிகமானோரை நீக்கப்பட்டும் வாக்களர் பட்டியல் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்ற தேர்தல்களில் வெளியிடப்பட்டு வருவதை பலமுறை நிர்வாகிகளிடமும், அரசியல் கட்சிகளிடமும், நற்பணி மன்றங்களிலும் முறையிட்டும் இதுவரை பதில் இல்லை. 
 
உதாரணமாக, ஆற்றங்கரை (கிழக்கு) தெரு பல வருடங்களுக்கு முன் 7வது வார்டில் இருந்தது. தற்போது 4வது வார்டில் வருகின்றது. ஆனால், சிலரின் தூண்டுதலினால் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்தத் தெரு பண்டக சாலை தெருவுடன் இணைக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிலும் முழுமையாக இல்லாமல் சிலரின் பெயர்கள் ஆற்றங்கரை காலணி, ஆற்றங்கரை மேல வீதி, முத்தையா முதலியார் தெரு, மேட்டுத் தெரு போன்ற தெருக்களின் பட்டியலில் வருகின்றன. மாதிரிக்கு இது ஒன்றுதான், ஆனால், பரங்கிப்பேட்டை முழுவதும் பல தெருக்கள் இவ்வாறு காணாமல் போய் இருக்கின்றன. 
 
மாதிரிக்கு சொல்ல வேண்டும் என்றால்... ஆற்றங்கரை கிழக்குத் தெருவில் ஒரு வீட்டில் 12 ஒட்டுகள் உள்ளன. அதில் 3 பண்டக சாலை தெருவிலும், 2 ஓட்டுகள் முத்தையா முதலியார் தெருவிலும், 2 ஓட்டுகள் மேட்டுத் தெருவிலும், 2 ஓட்டுகள் ஆற்றங்கரை காலணியிலும், 3 ஓட்டுகள் ஆற்றங்கரை மேல வீதியிலும் உள்ளன. இதுபோன்று ஒரு முழு தெருவையே காணாமல் ஆக்கியதை போன்று நகரின் பல தெருக்கள் காணாமல் போய் இருக்கின்றன. நாம் விசாரித்த வரையில் இது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை. திட்டமிட்டே நடத்தப்பட்டதாக தெரிகிறது. 
 
இதற்கு இந்நகைர ஆண்டவர்கள், ஆளப்போகின்றோம் என்ற கனவில் உள்ளோர்கள் முறையான நடவடிக்கை எடுத்து காணாமல் போன தெருக்களை கண்டுபிடித்து தராமல் இருந்தால் பலர் ஓட்டுப் போடுவதற்கு முன் வர மாட்டார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் 49'ஓவை பயன்படுத்தியதை போன்று இம்முறையும் பயன்படுத்த தயாராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
காணாமல் போன தெருக்கள் கண்டுபித்து தருவோருக்கு தக்க அன்பளிப்பு என்ற அறிவிப்பு வருவதற்கு முன்னால் மாற்றங்கள் வருமா?
 
படம்: காணாமல் போன ஆற்றங்கரை கிழக்குத் தெருவின் ஒரு பகுதி
பட உதவி: அய்மான்

Source: Mypno

கருத்துகள் இல்லை: